அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்தாண்டு மேற்கொண்ட பயணத்தின் போது, ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல்கட்டமாக வடக்கு அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ளன.
அமெரிக்கப் படைகளை வரவேற்றுப் பேசிய அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், அமெரிக்கப் படையின் வருகை உற்சாகமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்ரி ப்ளீச், ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உருவாக்க அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும் என்றார்.
சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் திமோர் கடற்பரப்பை எளிதில் எட்டக் கூடியவகையில் டார்வின் துறைமுகம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது என்றும் அவர் கூறினார்.
தற்போது 200 அமெரிக்க கடற்படையினர் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளனர். இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017-ம் ஆண்டில் 2500 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
வியட்நாம் போருக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய முதலாவது இராணுவ நடவடிக்கை இது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது டார்வின் துறைமுகத்தில் அமெரிக்காவின் போர்க் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால், இதன் மூலம் இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் மற்றும் திமோர் கடற்பரப்பை எளிதில் அமெரிக்க போர்க் கப்பல் சென்றடையும்.
டார்வின் துறைமுகத்தைத் தொடர்ந்து அடுத்து கோக்கோஸ் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் டேரா அடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக சீனாவை அடுத்த கட்டமாக நெருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தென்னாசிய பிராந்தியத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய மூன்று பெரிய நாடுகள் ஓரணியில் நிற்கின்றன. மேலும் வியட்நாமும் இந்தியாவுடன் இணைந்துள்ளது, மியான்மரும் அமெரிக்காவின் பேச்சைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இலங்கையும்கூட 2006-ல் அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தப் படி போர் ஒன்று நிகழ்ந்தால் அது அமெரிக்கா பக்கம்தான் நிற்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டிருக்கிறது.
எனவே மற்ற நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு குடைச்சலை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment