Wednesday, January 4, 2012

மௌனம் கலைந்த இந்தியா, அழுத்தம் கொடுக்க முயலுமா?

இலங்கை விவகாரத்தில் சொற்பகாலமாக மௌனம் காத்துவந்த இந்தியா தனது மௌனத்தை கலைந்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் இந்தியா தனது பிரதிபலிப்பை வெளியிட்டே மௌனம் கலைந்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பான இந்தியாவின் பிரதிபலிப்பு, அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட விளக்கம், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி குறித்தும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு நாடுகளும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்நிலையில் இந்தியாவும் தற்போது தனது பிரதிபலிப்பை வெளியிட்டுள்ளது.

வாக்குறுதிகளை ஞாபகமூட்டும் இந்தியா

இந்திய வெளியுறவு அமைச்சுதான் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இந்தியா வரவேற்கிறது. இலங்கை அரசாங்கமானது மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்திப்பது பற்றி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென இந்தியா நம்புகிறது.

நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியபடி, மனித உரிமை மீறல்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றி நம்கத்தன்மை கொண்ட விசாரணை நடைபெற வேண்டுமெனவும் இந்தியா விரும்புகிறது. அவ்வாறான ஒரு விசாரணை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடைபெறவேண்டும்.

பலவருடங்காக நடைபெற்ற உள்நாட்டு யுத்ததின் காயங்களை ஆறவைக்கும்வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன்மூலம் நீடித்திருக்ககூடிய சமாதானத்தை ஏற்படுத்தவேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதை இந்தியா கவனத்திற்கொள்கிறது.

இதுதொடர்பில், காணாமல் போணவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்த விபரங்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான தகவல்கள், மும்மொழி கொள்கையை முன்னெடுத்துச் செல்வது, சகல அலுவலகங்களிலும் தமிழ்பேசும் அதிகாரிகளை நியமிப்பது, உயர் பாதுகாப்பு வலயங்களை குறைப்பது, இராணுவத்தினரிடமுள்ள தனியார் காணிகளை திரும்ப ஒப்படைப்பது, வடமாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை மீண்டும் கொண்டுவருவது போன்றவை தொடர்பில் எடுக்கப்பட திட்டமிடப்படும் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை தாம் கவனத்திற் கொண்டுள்ளதாகவும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சு குறிப்பிடுகிறது.

மீள்குடியேற்றம் தொடர்பாக இலங்கை கொடுத்துள்ள வாக்குறுதிகளை துரிதமாக நிறைவேற்றுவதும், பொதுமக்கள் தமது இயல்பான வாழ்க்கையை முன்கொண்டுசெல்ல எடுக்கப்படும் நடவடிக்கைகளை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருக்குமெனவும் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட மோதல்களுக்கு அடிப்டையாக இருந்த காரணங்களை அரசு உணர்ந்துகொண்டு அதற்கு தீர்வு காணும்வகையில், ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஒருமித்த கருத்துடன்கூடிய நல்லிணக்கத்தை முன்னெடுத்துச்செல்ல நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை முன்னர் பலமுறை இந்தியாவுக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளது என்றாலும், அர்த்தமுள்ள வகையிலான அதிகாரப் பகிர்வு, உண்மையான நல்லிணகத்துக்கும் வழிவகுக்கும் என்பதை இலங்கை அரசு உணர்ந்து உறுதியான நடவடிக்கைளை எடுக்குமென்று இந்தியா மீண்டும் நம்புகிறது.

அப்படியானதொரு இணக்கப்பாட்டை நோக்கி இலங்கை செல்வதற்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை வழங்குமெனவும் இந்தியா வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள நீண்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்ப்பட்டுள்து.

இந்திய நிலைப்பாட்டை வரவேற்கும் சம்பந்தன்

இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் இந்தியா வெளிப்படுத்தியுள்ள பிரதிபலிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் வரவேற்றுள்ளார்.

உள்ளுர் ஊடகமொன்றுக்கு அவர் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

அமைதி தீர்வு முயற்சிகள் குறித்து இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதுடன், இந்தியாவின் வலியுறுத்தலை இலங்கை அரசாங்கம் சாதகமாக பரிசீலிக்வும் வேண்டும். 

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பததன்மையான, வெளிப்படையான விசாரணைகள் அவசியமென இந்தியா கூறியுள்ளது. இதுமிகவும் அவசியமானது. அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

அர்த்தபுஷ்டியான அரசியல் அதிகாரப் பகிர்வு நடைபெறவேண்டுமென இந்தியா கூறியுள்ளது. அவ்விதமான சாத்தியப்பாடான அதிகாரப்பகிர்வு இடம்பெறும் போதுதான் நிதர்சனமான ஒரு நல்லிணக்கம் ஏற்படும். அதையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வில் இயல்புநிலை திரும்புவதற்கும், யுத்தமற்ற சூழலில் அவற்றை நிறைவேற்ற அளித்த வாக்குறுதிகள் இலங்கை அரசால் நிறைவேற்றப்படவேண்டுமெனவும் இந்தியா வரவேற்றுள்ளது. இதையும் நாங்கள் வரவேற்கிறோம்.

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான இந்தியாவின் பிரதிபலிப்பு அறிக்கையை பொறுத்தமட்டில் தமிழ் மக்களின் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமான தேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தியா எமது விடயத்தில் நிண்ட காலமாக முக்கிய பஙகு வகிக்கும் ஒரு தரப்பாகும். தீர்வு முயற்சியில் இந்தியாவின் ஒத்தழைப்பு அரசாங்கத்திற்கும், தமிழருக்கும் Nவை. அந்த முயற்சியினூடாகவே நியாயமான விசுவாசமான ஒரு தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

இந்தியாவின் இத்தக்கருத்தைச் சாதரணமாக எடுத்துக்கொள்ளாமல் இலங்கை அரசு, சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும். நிரந்தரமான அரசியில் தீர்வை எட்டும் முயற்சிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்தழைப்பு நிச்சயம் கிட்டுமெனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு இலங்கையின் பதில்

இதேநேரம் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் இந்தியாவின் பிரதிபலிப்பு குறித்து வெளியாகியுள்ள அறிக்கையை இலங்கை ஏற்றுக்கொள்வதாக வெளிவிவகார பிரதியமைச்சர் நியூமல் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

நியாயமான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை உறுதியாகவுள்ளது. எமது நிலைப்பாட்டை இந்தியாவும் மதிக்கிறது. இறுதிப்போர் குறித்து தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நாம் தயாராயுள்ளோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் தொடர்பிலும் உறுதியாவுள்ளோம். விசாரணை நடத்தி தவறுகள் செய்தவர்களை கண்டுபிடிக்கவும் இலங்கை ஆயத்தமாயுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வருகிறார் கிருஸ்ணா

அதேவேளை இந்தியா வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா விரைவில் இலங்கை செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப் பகிர்வு பற்றி பேசவே அவர் இலங்கை செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் இறுக்கமான கட்டத்தை அடைந்திருக்கும்வேளை இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயமும் முக்கியத்துவமிக்கதாக நோக்கப்படுகிறது.

இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கு கிருஸ்ணா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்திப்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விவகாரத்தில் சிலகாலம் மௌனம் காத்துவந்த இந்தியா, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் வெளியிட்ட நீண்டதொரு பிரதிபலிப்பும், தற்போது இந்தியா வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் முக்கியத்துவமிக்க விடயங்களேயாகும்.

வடக்குகிழக்கு மாகாணங்களை இணைத்தல், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் உச்சக்கட்ட முரண்பாடுகள் எழுந்துள்ளநிலையில் கிருஸ்ணாவின் இலங்கை விஜயமும் நிச்சயம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக்கூடியதே.

அச்சப்படும் மஹிந்த

அத்துடன் இந்தியாவின் டெக்கன் குரொனிக்கல் எனற் ஊடகத்திற்கு செவ்வி வழங்கியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வடக்குகிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கின், உத்தரப் பிரதேசத்திற்கு ராகுல்காந்தி சென்றபோது மாயாவதி அவரை கைதுசெய்ததுபோன்று தானும் வடகிழக்கு சென்றால் கைது செய்யப்படலமென அச்சம் வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் இந்த அச்சம் நியாயமா அல்லது நியாயமற்றதா என்ற வாதம் ஒருபக்கமிருக்க, வடகிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்குவதில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் விருப்பமற்று காணப்படுவதையே இது உணர்த்துகிறது. இந்நிலையில் கிருஸ்னா இலங்கைவந்து எதை சாதிக்கப்போகிறார் என்று எம்மத்தியில் எழும் கேள்வி நியாயமானதுதான்..!!

No comments:

Post a Comment