Wednesday, March 21, 2012

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வட கொரியா



எங்களின் அணு ஆயுதங்கள் பற்றி விமர்சனம் செய்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியத் தலைநகர் சியோலில் சர்வதேச நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அணு சக்தி பாதுகாப்பு மாநாடு எதிர்வரும் 26, 27ம் திகதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அணு ஆயுதப் பரவல் குறித்தும், பயங்கரவாதிகளிடம் இருந்து அணு ஆயுதங்களைப் பாதுகாப்பது குறித்தும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்துவார்.
குறிப்பாக ஈரான் மற்றும் வட கொரிய நாடுகள் அணு ஆயுதங்களை மேம்படுத்துவதைத் தடை செய்வதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்வார் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோடஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இம்மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ், சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ ஆகியோரை சந்தித்துப் பேச ஒபாமா திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் சியோல் மாநாடு குறித்து வட கொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மாநாட்டில் வட கொரியாவின் அணு ஆயுதங்கள் குறித்து ஏதாவது விமர்சனம் செய்தால், அதுவே போருக்கான அழைப்பாகக் கொள்ளப்படும்.
அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் என எச்சரித்துள்ளது. தனது அணு ஆயுதக் குறைப்பு குறித்து பேச ஆறு நாடுகள் கூட்டத்திற்கு வட கொரியா ஏற்கனவே சம்மதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment